2 இராஜாக்கள் 24 : 1 (TOV)
அவன் நாட்களிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்தான்; யோயாக்கீம் மூன்று வருஷம் அவனைச் சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.
2 இராஜாக்கள் 24 : 2 (TOV)
அப்பொழுது கர்த்தர் கல்தேயரின் தண்டுகளையும், சீரியரின் தண்டுகளையும், மோவாபியரின் தண்டுகளையும், அம்மோன் புத்திரரின் தண்டுகளையும் அவன்மேல் வரவிட்டார்; தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே அவர் அவைகளை யூதாவை அழிக்கும்படிக்கு வரவிட்டார்.
2 இராஜாக்கள் 24 : 3 (TOV)
மனாசே தன் எல்லாச் செய்கைகளினாலும் செய்த பாவங்களினிமித்தம் யூதாவைத் தமது சமுகத்தை விட்டு அகற்றும்படி கர்த்தருடைய கட்டளையினால் அப்படி நடந்தது.
2 இராஜாக்கள் 24 : 4 (TOV)
அவன் சிந்தின குற்றமற்ற இரத்தத்திற்காகவும் எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பினதற்காகவும் கர்த்தர் மன்னிக்கச் சித்தமில்லாதிருந்தார்.
2 இராஜாக்கள் 24 : 5 (TOV)
யோயாக்கீமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
2 இராஜாக்கள் 24 : 6 (TOV)
யோயாக்கீம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய யோயாக்கீன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
2 இராஜாக்கள் 24 : 7 (TOV)
எகிப்தின் ராஜா அப்புறம் தன் தேசத்திலிருந்து புறப்பட்டு வரவில்லை; எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதிமட்டும் எகிப்தின் ராஜாவுக்கு இருந்த யாவையும் பாபிலோன் ராஜா பிடித்திருந்தான்.
2 இராஜாக்கள் 24 : 8 (TOV)
யோயாக்கீன் ராஜாவாகிறபோது பதினெட்டு வயதாயிருந்து, எருசலேமிலே மூன்று மாதம் அரசாண்டான்; எருசலேம் ஊரானாகிய எல்நாத்தானின் குமாரத்தியான அவன் தாயின் பேர் நெகுஸ்தாள்.
2 இராஜாக்கள் 24 : 9 (TOV)
அவன் தன் தகப்பன் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
2 இராஜாக்கள் 24 : 10 (TOV)
அக்காலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் சேவகர் எருசலேமுக்கு வந்தார்கள்; நகரம் முற்றிக்கை போடப்பட்டது.
2 இராஜாக்கள் 24 : 11 (TOV)
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய சேவகர் நகரத்தை முற்றிக்கை போடுகையில் அவன் தானும் அதற்கு விரோதமாய் வந்தான்.
2 இராஜாக்கள் 24 : 12 (TOV)
அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனும், அவன் தாயும், அவன் ஊழியக்காரரும், அவன் பிரபுக்களும், பிரதானிகளும் பாபிலோன் ராஜாவினிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்; அவனைப் பாபிலோன் ராஜா தன் ஆளுகையின் எட்டாம் வருஷத்திலே பிடித்துக்கொண்டான்.
2 இராஜாக்கள் 24 : 13 (TOV)
அங்கேயிருந்து கர்த்தருடைய ஆலயத்தின் சகல பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்துக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தில் உண்டாக்கியிருந்த பொன் பணிமுட்டுகளையெல்லாம் கர்த்தர் சொல்லியிருந்தபடியே உடைத்துப்போட்டு,
2 இராஜாக்கள் 24 : 14 (TOV)
எருசலேமியர் அனைவரும் சகல பிரபுக்களும் சகல பராக்கிரமசாலிகளுமாகிய பதினாயிரம்பேரையும், சகல தச்சரையும் கொல்லரையும் சிறைபிடித்துக்கொண்டுபோனான்; தேசத்தில் ஏழை ஜனங்களே அல்லாமல் வேறொருவரும் மீதியாயிருக்கவில்லை.
2 இராஜாக்கள் 24 : 15 (TOV)
அவன் யோயாக்கீனையும், ராஜாவின் தாயையும், ராஜாவின் ஸ்திரீகளையும், அவன் பிரதானிகளையும், தேசத்தின் பராக்கிரமசாலிகளையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்.
2 இராஜாக்கள் 24 : 16 (TOV)
இப்படியே பாபிலோன் ராஜா பராக்கிரமசாலிகளான மனுஷராகிய ஏழாயிரம்பேரையும், தச்சரும் கொல்லருமாகிய ஆயிரம்பேரையும், யுத்தம்பண்ணத்தக்க பலசாலிகளையும் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்.
2 இராஜாக்கள் 24 : 17 (TOV)
அவனுக்குப் பதிலாகப் பாபிலோன் ராஜா அவன் சிறிய தகப்பனாகிய மத்தனியாவை ராஜாவாக வைத்து, அவனுக்குச் சிதேக்கியா என்று மறுபேரிட்டான்.
2 இராஜாக்கள் 24 : 18 (TOV)
சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமிலே அரசாண்டான்; லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தியான அவன் தாயின் பேர் அமுத்தாள்.
2 இராஜாக்கள் 24 : 19 (TOV)
யோயாக்கீம் செய்தபடியெல்லாம் அவனும் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
2 இராஜாக்கள் 24 : 20 (TOV)
எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றித் தீருமளவும், அவைகளின்மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவுக்கு விரோதமாகக் கலகமும்பண்ணினான்.
❮
❯